நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பியை கொல்ல சதி: நடிகர் திலீப் உள்பட 4 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப், அவரது தம்பி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவரும், அவரது தம்பி உள்பட சிலர் பார்த்தது தனக்கு தெரியும் என்றும் இயக்குனர் பாலச்சந்திரகுமார் கூறியது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரிக்க போலீஸ் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், வரும் 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில், டிஎஸ்பி பைஜு பவுலோஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை பாலச்சந்திரகுமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் மேலும் ஒரு திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜு பவுலோசை லாரி ஏற்றி கொல்ல திலீப், அவரது தம்பி அனூப், உறவினர் சூரஜ் சதி திட்டம் தீட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் ஜாமீனில் ெவளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே திலீப்பிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட நடிகையிடமும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: