கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் சங்கரய்யாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதல்வர்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்த நிலையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் சோதனை முடிவுகள் வந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சங்கரய்யா விரைவில் முழுநலம் பெறக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கோவிட் 19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோழர் என்.சங்கரய்யா விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட விழைகிறேன். தோழரை கவனித்துக் கொள்ளத் தனி மருத்துவக் குழுவையும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சங்கரய்யாவிடம்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Related Stories: