3ம் அலை பரவலின் ‘ஆர்’ மதிப்பு 4 ஆக உயர்வு அடுத்த மாதம் உச்சம்: தொற்று மிக வேகமாக இருக்கும்; நிபுணர்கள் புதிய கணிப்பு

புதுடெல்லி:  கொரோனா பரவலை மதிப்பிடும் ‘ஆர் ’ மதிப்பு கடந்த வாரத்தில் 4 ஆக அதிகரித்திருப்பதாக கூறி உள்ள நிபுணர்கள், அடுத்த மாதம் 1-15ம் தேதிக்குள் 3ம் அலை உச்சமடையும் எனவும், இம்முறை தொற்று மிக வேகமாக அதிகப்படியாக இருக்கலாம் என்றும் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளனர்.ஒமிக்ரான் வகை புதிய கொரோனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் மீண்டும் புதிய கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை மதிப்பிடும் ஆர் மதிப்பு கடந்த வாரத்தில் 4 ஆக அதிகரித்துள்ளதாக ஐஐடி மெட்ராஸ் ஆய்வறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒருநபர் எத்தனை பேருக்கு வைரசை பரப்புவார் என்பதை மதிப்பிடுவதே ஆர் மதிப்பாகும். இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக கருதப்படும். 1க்கு மேல் அதிகரித்தால் பரவல் தீவிரமடைவதாக அர்த்தம்.

கடந்த ஆண்டு கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்த போது ஆர் மதிப்பு 1.69 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒமிக்ரான் பரவலுக்குப் பிறகு ஆர் மதிப்பு 2.69 ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை சமீபத்தில் கூறியது. இது கடந்த வாரம் 4 ஆக அதிகரித்துள்ளதாக ஐஐடி மெட்ராஸ் கணிதத்துறை உதவி பேராசிரியர் ஜெயந்த் ஜா உள்ளிட்டோர் மேற்கொண்ட பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து ஜெயந்த் ஜா கூறுகையில், ‘‘தேசிய அளவில் கடந்த வாரத்தில் (டிச. 25 முதல் டிச. 31 வரை) ஆர் மதிப்பு 2.9க்கு அருகில் இருந்தது. இந்த வாரம் (ஜன. 1-6) 4 என்ற எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது. இப்போது, ​​தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிப்பால், தொற்று விகிதம் குறையலாம். இனி வரும் நாட்களில் எவ்வளவு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து இது அமையும். தற்போதைய மதிப்பீட்டின்படி, 3ம் அலையின் உச்சம் அடுத்த மாதம் 1-15ம் தேதிக்குள் ஏற்பட வாய்ப்புண்டு. இது முந்தைய உச்சங்களை விட மிக பயங்கரமாக இருக்கும். நமக்குள்ள நன்மை என்னவென்றால், இந்த முறை கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர்,’’ என்றார்.

2 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி

15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. நாட்டில் 7.4 கோடி சிறுவர்கள் உள்ள நிலையில், தற்போது 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறி உள்ளார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 90 லட்சத்து 59 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 150.61 கோடி டோஸ்களாக அதிகரித்துள்ளது.

பஞ்சாப் முதல்வர்

குடும்பமே பாதிப்பு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மனைவி கமல்ஜித் சிங், மகன் நவ்ஜித் சிங் மற்றும் மருமகள் சிம்ரன்தீர் கவுர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால், அவர்கள் வீட்டு தனிமையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் சன்னிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் 1,41,986

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது 222 நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச தினசரி தொற்று பதிவாகும். மொத்த தொற்று எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 372 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 285 பேர் பலியாகி உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1 லட்சத்து 806 பேர் அதிகரித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே ஒமிக்ரான் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளது. 27 மாநிலங்களில் பரவி உள்ள ஒமிக்ரான் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 876, டெல்லியில் 513, கர்நாடகாவில் 333, ராஜஸ்தானில் 291, கேரளாவில் 284, குஜராத்தில் 204 ஆக பதிவாகி உள்ளது. இதுவரை 1203 பேர் குணமடைந்துள்ளனர்.

முன்பதிவு தேவையில்லை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள முதியவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. 2 டோஸ் முழுமையாக செலுத்திக் கொண்டு, 9 மாதங்கள் பூர்த்தி செய்தவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தகுதியான நபர்கள் நேரடியாக ஏதேனும் ஒரு முகாமுக்கு சென்று பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். தகுதியான நபர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவுறுத்தல் அனுப்பப்படும்.

Related Stories: