அடிக்கடி உடையும் புத்தேரி குளம் தண்டவாளம் மூழ்காமல் இருக்க சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதில் நாகர்கோவில் அருகே புத்தேரி குளத்தையொட்டி உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன. மழை காலங்களில் இந்த குளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து கரைகள் உடைந்து, தண்ணீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கூடுதலாக அமைக்கப்பட உள்ள தண்டவாளம் குளத்தையொட்டி வர இருப்பதால், மழை காலங்களில் குளம் உடைந்தால் தண்டவாளம் மூழ்கும்.

எனவே இதை தடுப்பதற்காக தற்போது தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் குளத்தின் கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சுமார் 5 மீட்டர் உயரத்தில் கற்களை ெகாண்டு சுற்றுசுவர் அமைக்கப்படுகிறது. இரும்பு வலைகள் அமைக்கப்பட்டு அதனுள் கற்கள் அடுக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. தண்ணீர் இறங்கி அதன்மூலம் கற்கள் நழுவி இறங்காமல் இருப்பதற்காக வலைகள் அடிக்கப்படுகிறது. நீர் நிலைகளையொட்டி ரயில்வே அமைக்கும் சுற்றுசுவர்கள், பாலங்களில் இந்த தொழில்நுட்ப நடைமுறை பின்பற்றப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: