கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

* சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

* சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: