கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறை குலுக்கலில் ஒதுக்கீடு

கரூர் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளுக்கான கணினி முறை குலுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபு சங்கர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 8 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு கருவி மற்றும் ஒரு கட்டுப்பாட்டு கருவி என்ற விகிதத்தில், முதலாவது கணினி முறை குலுக்கல் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவைப்படும் கருவிகளின் எண்ணிக்கையை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதனடிப்படையில், கரூர் மாநகராட்சியில் உள்ள 191 வாக்குச்சாவடிகளுக்கு 191 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடுதலாக 40 கருவிகளும் என மொத்தம் 231 வாக்குப்பதிவு கருவிகளும், இதே போல், 231 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.குளித்தலை நகராட்சிக்கு 24 வாக்குச்சாவடி மையங்களுக்கு 24 வாக்குப்பதிவு கருவிகளுடன் கூடுதலாக 5 கருவிகள் என மொத்தம் 29 வாக்குப்பதிவு கருவிகளும், இதே போல், 29 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது.

பள்ளப்பட்டி நகராட்சிக்கு 35 வாக்குச்சாவடி மையங்களுக்கு 35 கருவிகளுடன் கூடுதலாக 7 கருவிகள் என மொத்தம் 42 வாக்குப்பதிவு கருவிகளும், 42 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது. புகழூர் நகராட்சிக்கு 32 வாக்குச்சாவடி மையங்களுக்கு 32 வாக்குப்பதிவு கருவிகளுடன் கூடுதலாக 7 கருவிகள் என மொத்தம் 39 கருவிகளும், இதே போல், 39 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது. இதே போல், 8 பேரூராட்சிகளுக்கும் மொத்தம் 491 வாக்குப்பதிவு கருவிகளும், 491 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது.

நடைபெற்ற கணினி முறை குலுக்கலின் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு மொத்தம் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள், எந்தந்த பெட்டிகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். அவை எந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் இயந்திரங்களை எந்தந்த பெட்டிகளில் வைக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விபரங்களும் கணினியால் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

பின்னர், தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வைப்பு அறையில் இருந்து ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணி அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லீலாகுமார் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Stories: