வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் ₹82 லட்சத்தில் போடப்பட்ட தார்சாலையில் பள்ளம் தோண்டி கலெக்டர் திடீர் ஆய்வு-செயற்பொறியாளர் குழப்பியதால் கடுப்பான கலெக்டர்

வந்தவாசி :  வந்தவாசி அடுத்த  வங்காரம் கிராமத்தில் ₹82 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார்சாலையை பள்ளம் தோண்டி கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது செயற்பொறியாளர்கள் குழப்பியதால் கலெக்டர் கடுப்பானார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆராசூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ₹2.60 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடும் பணியை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஏற்கனவே கடந்த 2 வருடத்திற்கு முன்பாக ₹2.60 லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டு, தற்போது 10 அடிக்கும் அதிகமான உயரத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்து தொடர்ந்து பாரமரிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பிரபுவிற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து வங்காரம் கிராமத்தில் இருந்து கயநல்லூர் கிராமத்திற்கு செல்லும் சாலை ₹82 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் பள்ளம் தோண்டி எந்த மாதிரியான ஜல்லி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்தார். அப்போது ‘தார்சாலை மேல்பகுதியில் தரம் குறைவாக உள்ளதால், ஜல்லி கற்கள் வெளியே தெரிகிறது. மழை பெய்தால் சாலை பெயர்ந்து போகுமே’ என்றார். அதற்கு அலுவலர்கள் வெயில் காலத்தில் தார் இறுக்கமாகி சாலை உறுதியாகும் என்றனர்.

வங்காரம் கிராமத்தில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையை ஆய்வு செய்த கலெக்டர், அங்கேயே தற்காலிக ஆய்வு செய்வதற்கான தளவாடப்பொருட்களை ஊரக வளர்ச்சி திருவண்ணாமலை செயற்பொறியாளர்  பி.ராமகிருஷ்ணன், சாலை பாலம் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் கொண்டு கலெக்டரிடம் சாலையின் தன்மை குறித்து விளக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது 3 இன்ச் பைப்பில் சாலையில் செருகி அதில் வந்த தார் சாலையின் அளவை ஆய்வு செய்தனர். பின்னர், சாலையில் இருந்து எடுக்கப்பட்ட தார்சாலையின் கலவையை எடைபோட்டனர். அதன் எடை 3 கிலோ என்று வந்தது. பின்னர், அங்கிருந்த எண்ணூர் மணலை அதே 3 இன்ச் பைப்பைகொண்டு மணல் எடுத்து ஆய்வு செய்ததில், 2.250 கிராம் என்று காட்டியது. இதைப்பார்த்த கலெக்டர் ஏன் எடையில் வித்தியாசம் ஏற்படுகிறது என்று கேட்டார். அதற்கு செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அதற்கான விளக்கம் அளிக்க முடியாமல், ஏதோ காரணம் கூறி கலெக்டரை குழப்பினர். இதையடுத்து சாலையின் அடிப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தை கணிக்கும் இயந்திரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து மண்ணை கொட்டி சரிபார்த்தனர்.

அவ்வாறு ஈரப்பதத்தை கணிக்கும் இயந்திரத்தில் 9 சதவீதம் அளவை காட்ட வேண்டும். ஆனால், அந்த மீட்டர் எந்த ஒரு கணிப்பையும் காட்டாமல், அதன் அளவை காட்ட வேண்டிய முள் நகராமல் அப்படியே இருந்தது. இதைப்பார்த்த கலெக்டர் அவர்களிடம் ஏன் சரியான மீட்டர் கொண்டு வந்து ஈரப்பதத்தை கண்காணிக்க மாட்டீர்களா என்று கடுகடுத்தார்.

அப்போது கூடுதல் கலெக்டர்  மு.பிரதாப், பிடிஓக்கள் மூர்த்தி, குப்புசாமி, பொறியாளர்கள் ரவிமலரவன்,  பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் தங்கம் செ.சீ.மணி, ஊராட்சி மன்ற தலைவர்  செல்வி சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: