பேராவூரணியில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-ரூ.15,800 அபராதம் விதிப்பு

பேராவூரணி : தமிழகஅரசு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு ஜனவரி 1 முதல் தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.இதையடுத்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுறுத்தலின்படி பேராவூரணி கடைவீதியில் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

சோதனையில் மளிகைக்கடை, உணவகம், தேனீர் கடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளில் பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒருமுறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.ஆய்வின் போது மளிகை, ஓட்டல், பழக்கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 13 கிலோபிளாஸ்டிக் பை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.15,800 அபராதம் விதிக்கப்பட்டது.

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் பொருட்கள் வாங்க துணிப்பையுடன் வரவேண்டும் எனவும் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

Related Stories: