மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் மக்களுக்காக நேரடியாக  ஒளிபரப்படுகிறது. கேள்வி நேரத்தின் முதலாவதாக சென்னை மெட்ரோ இரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிப்பது தொடர்பாக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. கருணாநிதி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்

கேள்வி:

    (அ)  சென்னை மெட்ரோ இரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய்யுமா?

    (ஆ)  ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது பதில்

    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்ட கேள்விக்கான பதில்.  

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ இரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது.  இதனைக் கருதி, இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது.  இந்த விரிவான இறுதித் திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது.  இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: