திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி நிலம் மீட்பு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களும், சென்னை, புதுச்சேரி, மறைமலைநகர், திருப்போரூர் உள்பட பல இடங்களில் கட்டிடங்களும், வீட்டு மனைகளும் உள்ளன. கடந்த ஜூலை மாதம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மீட்காமல் உள்ள நிலங்கள், சொத்துக்களை மீட்டு கோயில் வசம் ஒப்படைக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருப்போரூர் - நெம்மேலி சாலையில் கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலங்கள், சென்னையில் உள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது தெரிந்தது. இதையடுத்து அந்த அறக்கட்டளையின் ஆவணங்கள் ஆய்வு செய்தபோது, கோயில் நிலத்தை சட்டவிரோதமாக கிரயம் பெற்றிருப்பதும், கிரையம் பெற்ற நிலங்களை ஒட்டி 8 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து முதற்கட்டமாக அந்த நிலங்களை மீட்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில் ஊழியர்கள், நேற்று திருப்போரூர் - நெம்மேலி சாலையில் உள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்த 8 ஏக்கர் நிலங்களை மீட்டு அறிவிப்பு பலகையை நட்டு வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ₹20 கோடி என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய கோயில் நகரங்களில் இருப்பது பக்தர்கள் தங்கும் அறைகள் கட்ட அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.

Related Stories: