மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-ஏராளமானோர் பங்கேற்பு

காவேரிப்பாக்கம் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தீனதயாள் உபாதியாய ஊரக கவுசல்ய யோஜனா திட்டத்தின் வாயிலாக, வட்டார அளவிலான தனியார் துறை  வேலைவாய்ப்பு மற்றும்  வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாடு பயிற்சி முகாம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தீபா கார்த்திகேயன்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் திவ்யபாரதி தினேஷ்காந்தி, ஆனந்தி கோவிந்தன், ரமணி ராஜூ, சங்கீதா ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் கலைச்செல்வி வரவேற்றார்.

முகாமில்  சிறப்பு அழைப்பாளர்களாக திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் நானிலதாசன், உதவி திட்ட அலுவலர்கள் பெர்லீனா, சாகுல் அமீத் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர். இதில் 22 தனியார் கம்பெனிகள் கலந்து கொண்டு, தங்களுடைய கம்பெனிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்தனர்.

இதில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் இருந்து, 265 நபர்கள் கலந்து கொண்டனர். முகாமில் படிக்காத, மற்றும் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பிஇ உள்ளிட்ட பட்ட  படிப்புகள் படித்த இருபாலரும் கலந்து கொண்டனர்.முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஊரகப் பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு,  பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது  வட்டார இயக்க பொறுப்பாளர்கள், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: