தமிழக சட்டப்பேரவை கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது: பரிசோதனையில் நெகட்டிவ் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி; அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தவர்கள் மட்டுமே பேரவை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வந்தது. தொற்று குறைந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில் நாளை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும், கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

 இதற்கிடையே, தமிகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால் சமூக இடைவெளியுடன் சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டத்தை மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி கலைவாணர் அரங்கத்திற்கு காலை 9.55 மணிக்கு வருவார். அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்குள் அழைத்து செல்வார். சரியாக காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம்

கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரையாற்றுவார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

அதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், அரசு கொறடா கோவி செழியன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சட்டசபை கூட்டத்தை குறைவான நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது. எனவே 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான், பேரவை மண்டபத்துக்குள் செல்ல முடியும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பேரவை நிகழ்ச்சிகளை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: