ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் முதல்வர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

சென்னை: முதலமைச்சர் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தை (Screening Center) மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் இன்று (04.01.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 21 முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் இன்று (04.01.2022) முதல் செயல்படத் தொடங்கி உள்ளன. இம்மையங்களில் தொற்று பாதித்த நபர்களுக்கு இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்றின் தன்மைக்கு ஏற்ப தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும். மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது : சென்னையில் கோவிட் தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த மே மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற போது, மாநிலத்தில் கோவிட் தொற்று பரவல் சுமார் 30,000 என்கின்ற நிலையில் இருந்தது. நாள்தோறும் இதுகுறித்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்தும், நேரடியாக களஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையிலும் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.  தற்சமயம் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்டமாக பரிசோதனை செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் (Screening Centers) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் தொற்று பாதித்த நபர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகளுக்கு தேவையான மருந்துகளும், எக்ஸ்ரே, இரத்த மாதிரி போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோயின் தாக்கமும் கண்டறியப்படுகிறது.

இதனடிப்படையில், மருத்துவர்களால் தொற்று பாதித்த நபர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்லவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோவிட் தொற்று பாதித்த நபர்கள் உள்ள பகுதிகளில் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்காக ஒரு வார்டிற்கு 5 நபர்கள் வீதம், 200 வார்டுகளுக்கு 1000 தன்னார்வலர்கள் (FOCUS Volunteers) நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதித்த நபர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் (Tele-Counseling Centers) அமைக்கப்பட்டுள்ளன.

மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் 5 தொலைபேசி இணைப்புகளுடன் 5 பணியாளர்கள் மற்றும் 1 மருத்துவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து வீட்டு தனிமையில் உள்ள நபர்கள் நாள்தோறும் இரண்டு முறை அழைக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்படும். தேவைப்படும் நபர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தில் தொலைபேசி ஆலோசனை மையம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஒரு துணை ஆட்சியர், 2 மருத்துவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை மையத்தில் கோவிட் தொற்று தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: