வாணியம்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்கும் சிறுவர்கள்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாட்றம்பள்ளி : வாணியம்பாடி ரயில் நிலையம் வழியாக தினமும் சென்னை, கோவை, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களுக்கு 120க்கும்  மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்பாதையில் எப்போதும் ரயில்கள் செல்வதால் தண்டவாளத்தை பொதுமக்கள் யாரும் கடக்கக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

மேலும் சிலர் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி மற்றும் போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தினமும் சிறுவர்கள் சிலர், தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பது தொடர்கதையாகி வருகிறது.

சிலர் தனியாக வந்து செல்பி எடுப்பதும், நண்பர்களுடன் வந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு போட்டோ எடுக்கும்போது அவ்வழியாக ரயில்கள் வந்தால் அதில் சிக்கி காயமடையவோ, அல்லது இறக்கவோ நேரிடலாம் என்ற அபாயம் உள்ளது. எனவே ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் இச்செயலில் ஈடுபடுவதை தடுக்க அவர்களது பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். மேலும் ரயில்வே போலீசாரும் இதை தடுக்கவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: