இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரின் காவலை வரும் 5ம் தேதி வரை நீட்டித்து, மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிச.19ம் தேதி மண்டபம் கடற்கரையில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, தங்கச்சிமடத்தை சேர்ந்த சவரிராஜ் மற்றும் இவரது சகோதரர் அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளில் இருந்த மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்து சென்றனர்.

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் 12 பேரும் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் நீதிபதி சிவக்குமார், மீனவர்கள் 12 பேரின் காவலையும், வரும் 5ம் தேதி வரை (நாளை மறுநாள்) நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 12 பேரும், மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை சிறையில் தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 43 பேர், தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டணத்தை ேசர்ந்த 13 பேர் என மொத்தம் 68 தமிழக மீனவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: