ஏலகிரி மலையில் குண்டும், குழியுமாக உள்ள அத்தானவூர்-கோட்டூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் குண்டும், குழியுமாக உள்ள அத்தனாவூர்- கோட்டூர் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால், தனி அலுவலர் மூலம் கிராம நிர்வாகம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து ஊராட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எனவே, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஏலகிரி மலையிலும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ கிரிவேலன் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்விளக்கு போன்றவற்றை வசதிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், அத்தனாவூர் கிராமத்தில் இருந்து கோட்டூர் பகுதிக்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் கோட்டூர் கிராமத்தில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: