கரிக்கலாம்பாக்கம் - ஏம்பலம் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் குளம் தூர்ந்துபோகும் அவலம்

வில்லியனூர் :  வில்லியனூர் அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் - ஏம்பலம் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக நெட்டப்பாக்கம், ஏம்பலம் தவளக்குப்பம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தில் உள்ள குளத்தில் ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், நத்தமேடு, புதுக்குப்பம், செம்பியம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மற்றும் கால்நடை கழிவுகளை கொட்டி குளத்தை தூர்த்து வருகின்றனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில் குப்பைகளை கொட்டி குளத்தை தூர்த்து வருவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று ஏம்பலம் பகுதி சாலையோரத்தில் உள்ள குளத்திலும் குப்பையை கொட்டி தூர்த்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இரண்டு குளங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் நிலை ஏற்படும். மேலும், இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் இந்த குப்பைகளுக்கு தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால், ஏம்பலம்-கரிக்கலாம்பாக்கம் செல்லும் சாலையில், கடும் புகை சூழ்ந்துவிடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆதலால், கரிக்கலாம்பாக்கம்-ஏம்பலம், சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: