கும்பகோணம் அருகே சேமிப்பு கிடங்கில் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருந்த 60,000 நெல்மூட்டை மழையால் சேதம்

கும்பகோணம்:  கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் சன்னாபுரம் கிராமத்தில் கனமழையால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர், சன்னாபுரம், கொத்தங்குடி, தண்டந்தோட்டம் ஆகிய இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் இந்த  திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. நனைந்த நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தும் சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து திடீரென கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மீண்டும் நனைந்தன. இதனால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன. கடந்த மாதம் பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகளை பாதுகாத்து இருந்திருந்தால் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும்  என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories: