காரில் கடத்தி விவசாய நிலத்தில் பதுக்கல் 600 கிலோ செம்மரக்கட்டை குடியாத்தத்தில் பறிமுதல்: தந்தை, மகன் உட்பட 3 பேரிடம் விசாரணை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே 2 சொகுசு கார்களில் கடத்தி விவசாய நிலத்தில் பதுக்கிய 600 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் சிறுவன் உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரயில் நிலையம் செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக ஆந்திர பதிவு எண் கொண்ட சொகுசு கார் நேற்று மதியம் நின்றிருந்தது. மேல்பட்டி போலீசார் அங்கு சென்று காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு(28), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகத்தை சேர்ந்த கார்த்திக்(27) என்பது தெரியவந்தது.

இவர்கள் காட்பாடியிலிருந்து 2 சொகுசு காரில் 18 செம்மரக்கட்டைகளை கடத்தி, குடியாத்தம் அருகே எம்.வி.குப்பம் கிராமத்தில் பழனி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அந்த விவசாய நிலத்திற்கு சென்று அங்கு நின்ற மற்றொரு சொகுசு கார் மற்றும் பதுக்கி வைத்திருந்த  600 கிலோ எடையுள்ள 18 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். நிலத்தின் உரிமையாளர் மேல்பட்டியை சேர்ந்த பழனி(50), அவரது 15 வயது மகன், பழனியின் தம்பி மகன் சரத்குமார்(25) ஆகிய 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் கார் டிரைவர் சுரேஷ்பாபு, நிலத்தின் உரிமையாளர் பழனி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவன் உட்பட 3 பேரிடமும் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து வெட்டி கொண்டுவரப்பட்டது, வேறு யாருக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: