பெகாசஸ் மூலம் உங்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதா? 7ம் தேதிக்குள் புகார் செய்யலாம்

புதுடெல்லி: ‘பெகாசஸ் உளவு மென்பொருளால் தங்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகம் கொண்டவர்கள் வரும் 7ம் தேதிக்குள் புகார் தெரிவிக்கலாம்,’ என உச்ச நீதிமன்ற தொழல்நுட்பக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக உலகம் முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவிலும் இந்த விவகாரம் பூதாகரமானது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பெகாசஸ் உளவு மென்பொருளானது அரசாங்கத்திற்கு மட்டுமே விற்கப்படுவதாகும். இந்த விஷயத்தில் அனைத்து குற்றச்சாட்டையும் ஒன்றிய அரசு மறுத்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் செல்போன்களை உளவு பார்க்க ஒன்றிய அரசு பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தொழில்நுட்ப குழு தற்போது பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘பெகாசஸ் உளவு மென்பொருளால் தங்களின் மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்கள் உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகிக்கும் நபர்கள், வரும் 7ம் தேதிக்குள் இ-மெயில் மூலமாக தொழில்நுட்ப குழுவை அணுக வேண்டும். அதோடு, பெகாசஸ் மென்பொருளால் சாதனங்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதை நம்புவதற்கான காரணத்தையும், சம்பந்தப்பட்ட சாதனத்தை ஆய்வு செய்வதற்கு வழங்குவதற்கான ஒப்புதலையும் தெரிவிக்க வேண்டும். ஆய்வுக்குப் பிறகு அந்த சாதனங்கள் திருப்பி தரப்படும்’ என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: