100 கிடாக்கள் வெட்டி ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் அசைவ ‘கமகம’ விருந்து படையல்: திருமங்கலம் அருகே ‘ருசி’கரம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் திருவிழாவில், பக்தர்களுக்கு 100 கிடா வெட்டி சுவைமிகு விருந்து படைக்கப்பட்டது. விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, அனுப்பபட்டி கரும்பாறை முத்தையா சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 கருப்பு கிடாய்கள் வெட்டப்பட்டு, சமையல் செய்யப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது. கோயிலில் வளாகத்தில் வரிசையாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் அமர வைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அனைத்து இலைகளுக்கும் பரிமாறப்பட்ட பின்புதான் உணவருந்த வேண்டும் என்பது ஐதீகம். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘இக்கோயிலுக்கு நேர்த்திக்கடனாக கருப்பு ஆட்டுக்கிடாக்களை விட்டு செல்வோம். இந்த கிடாக்கள் ஓராண்டு இந்த பகுதியில் எந்த கிராமத்திற்கும் சென்று வரும். திருவிழாவிற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு அவைகள் கோயிலுக்கு கொண்டு வரப்படும். கிராம மக்களும் கோயிலுக்கு நேர்ந்த கிடா என்பதால் எதுவும் செய்ய மாட்டார்கள்’’ என்றனர்.

இலை பறந்தால் தான் அனுமதி

திருவிழாவில் திருமங்கலம், கரடிக்கல், சொரிக்காம்பட்டி, செக்கானூரணி, சிக்கம்பட்டி, கொக்குளம், தேன்கல்பட்டி, தோப்பூர், மூனாண்டிபட்டி, கிண்ணிமங்கலம், உரப்பனூர், சாத்தங்குடி, உசிலம்பட்டி மற்றும் தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்கள் சாப்பிட்ட பின் இலையை யாரும் எடுக்க மாட்டார்கள். அந்த இலை காய்ந்து காற்றில் பறந்த பின்புதான் பெண்கள் இந்த பகுதியில் நடமாட வேண்டுமென்பது இக்கிராம ஐதீகம்.

Related Stories: