கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி

சென்னை: ஆவடி இந்துக்கல்லூரி தென்றல் நகரை சேர்ந்தவர் கீர்த்தனா(24). கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இறுதி ஆண்டு என்பதால் கீர்த்தனா மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கீர்த்தனா அதிகளவில் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

நீண்டநேரமாக கீர்த்தனா விடுதி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தோழி ஜாஸ்மின் வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் கீர்த்தனா கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனே கீர்த்தனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். டாக்டர்கள் விரைந்து சிகிச்சை அளித்ததால், அபாயக்கட்டத்தை தாண்டி கீர்த்தனா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: