தமிழக திட்டங்களுக்கான ரூ.17 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: அடுத்தாண்டு ஒன்றிய பட்ஜெட்டுக்கான ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நேற்று நடத்தினார். இதில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் பேசியதாவது: பகிரப்படாத செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 6.26 சதவீதமாக இருந்த இந்த வரி தற்போது 19.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதில் மொத்தமாக வசூலிக்கப்படும் வரித்தொகையை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதை அடிப்படை வரியுடன் இணைக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சரிக்கட்ட இழப்பீடு தொகை வழங்குவதை 2022 ஜூன் மாதத்திற்கு மேலும் நீட்டிக்க வேண்டும். தமிழத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை இழப்பீட்டு தொகையான ரூ.16,725 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். நேரடி வரியை விட மறைக வரிகள் தற்போது அதிகரித்துள்ளது. இது ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. எனவே, நேரடி வரி மற்றும் மறைமுக வரியை 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும்.

ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது, சிறு குறு தொழில் துறையில் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, கடுமையான நிதி சுமையில் உள்ள இந்த துறையினருக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் ஒன்றிய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கான அமைப்புகள் இயங்குவதற்கு தமிழக அரசு இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ நிலங்களை வழங்கியது. ஆனால், தற்போது அந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கி விட்டதால் தற்போதைய சந்தை மதிப்பில் அந்த நிலத்தின் விலையை தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், 2017-18 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கான திட்டங்களின் மதிப்பீடு, ரூ.2,029.22 கோடி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.548.76 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலம் என்பதால் இந்த நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பழனிவேல் ராஜன் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் வருமாறு:

* பழைய வாகனங்களை அழிக்கும் -2021 சட்டத்தின்படி, அதற்காக கட்டமைப்புகளை உருவாக்க அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய பட்ஜெட்டில் இதற்கான சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.

* தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கான நிதியை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

* சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்கான நிதி தொகையை ஒன்றிய, மாநில அரசுகள் சம அளவில் பகிர்வது தொடர்பாக அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும்.

* தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவற்கான நிதியை ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு புதிய ரயில்வே விரிவாக்க திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.

* மதுரையில் அமையும் என்ஐபிஇஆர் திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே நிலம் ஒதுக்கி விட்டபோதும் ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனவே, பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்.

* எக்கு, தாமிரம், அலுமினியம், பித்தளை மற்றும் பருத்தி நூல் ஆகியவற்றின் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

நிலத்துக்கு சந்தை விலை

*கூட்டத்துக்கு பிறகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி வருமாறு: இன்றைய கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தமிழகத்தின் தரப்பில் முன் வைக்கப்பட்டது. 20 சதவீதம் மொத்த வருமானம் ஒன்றிய அரசுக்கு போவதால் மாநிலத்தின் நிதி உரிமை பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டிலேயே விமான நிலையம் விரிவாக்கம் என்பது தமிழகத்தில் தான் முதல் முதலாக கலைஞர் ஆட்சியில் செய்யப்பட்டது. இதுபோன்று செய்யப்படும் போது மாநில அரசு ஒன்றியத்துக்கு இலவசமாக நிலங்களை வழங்கியது. ஆனால், தற்போது அவையெல்லாம் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு மூன்று இடங்களில் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டும்.

இது இப்போது தனியாருக்கு வழங்கப்படுகிறது. பாதுகாப்புத்துறையிடம் இருந்து நிலத்தை வாங்கி நாங்கள் கொடுக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசுக்கு இரண்டு முறை தொகை வந்துவிடும். அதனால் அதுகுறித்த விதிமுறைகளை மாற்ற வேண்டும். அதனால் இனிமேல் நிலத்தை நாங்கள் கொடுத்தால் அரசாங்கத்தால் நடத்தப்படும் வரையில் குத்தகையாக இருக்கும். தனியாராகும் பட்சத்தில் சந்தை விலையில் கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நாளை (இன்று) நடக்கும்  ஜி.எஸ்.டி கூட்டத்தில் பல கருத்துக்களை மாநில அரசு தரப்பில் முன் வைக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: