சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் ஓய்வு

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர். 37 வயதான இவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2007ம் ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பு மார்ச் 2006ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

நியூசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட்டில் ஆடி 19 சதம், 35 அரைசதத்துடன் 7584 ரன்னும், 233 ஒருநாள் போட்டிகளில் 21 சதம், 51 அரைசதத்துடன் 8581 ரன்னும், 102 டி.20 போட்டிகளில் 1909 ரன்னும் அடித்துள்ளார். ஐபிஎல்லில் பெங்களூரு, ராஜஸ்தான்,டெல்லி அணிகளுக்கான விளையாடி உள்ளார். அண்மைகாலமாக பார்ம் இழந்து ரன் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் டி.20, ஒருநாள் போட்டி அணிகளில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக ரோஸ் டெய்லர் அறிவித்துள்ளார். வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் போட்டி முறையே ஜன. 1-5, 9-13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் தான் ரோஸ் டெய்லர் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாகும்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு அற்புதமான பயணம் மற்றும் நான் இருக்கும் வரை எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர்கிறேன். சில சிறந்த வீரர்களுடன் விளையாடுவதும், அவர்களுக்கு எதிராக விளையாடுவதும், வழியில் பல நினைவுகளையும் நட்பையும் உருவாக்கியதும் ஒரு பாக்கியம். ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், நேரம் எனக்கு சரியானதாக இருக்கிறது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நான் இந்த நிலைக்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி, என தெரிவித்துள்ளார்.

3 வடிவ கிரிக்கெட்டிலும் நியூசிலாந்துக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் வீரர் டெய்லர் தான். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகரன் (18,074), போட்டிகள் (445) மற்றும் அதிக சதங்கள் (40) அடித்துள்ள நியூசிலாந்து வீரரும் டெய்லர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: