ரிலையன்ஸ் குழும தலைமை மாற்றம்: முகேஷ் அம்பானி சூசக அறிவிப்பு

புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான சூசக அறிவிப்பை, முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி (64), ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரிலையன்ஸ் குழும தலைவர் பதவிக்கு தனது வாரிசுகளை கொண்டு வர அம்பானி விரும்புகிறார். இதை வெளிப்படுத்தும் வகையில், இக்குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்தநாளை குறிக்கும் ரிலையன்ஸ் குடும்ப தினவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:  ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தற்போது முக்கியமான தலைமை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டில் உள்ளது. நான் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையூட்டும் இளம் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும். இளம் தலைமுறையினருக்கு இணங்கும் வகையில் செயல்முறைகளை துரிதப்படுத்த வேண்டும்.

நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களை இயக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்கள் நம்மை விட சிறப்பாக செயல்படுவதை பார்த்து பாராட்ட வேண்டும்.  வரும் ஆண்டுகளில் ரிலையன்ஸ் உலகின் வலிமையான மற்றும் புகழ் பெற்ற இந்திய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறும். பெரிய கனவுகள் மற்றும் சாத்தியமற்றதாக தோற்றமளிக்கும் இலக்குகளை அடைவதே சரியான தலைமைக்கு பெருமை. அடுத்த தலைமுறையை நோக்கி ரிலையன்ஸ் பயணிக்கிறது.

ஆகாஷ், இஷா, ஆனந்த் ஆகியோர் அடுத்த தலைமுறை தலைவர்களாக ரிலையன்ஸ் நிறுவனத்தை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. என் தந்தையிடமும், என்னிடமும் இருந்த அதே தீப்பொறியையும், ஆற்றலையும் அவர்களிடம் காண்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்தை மேலும் வெற்றி பெறச் செய்வதற்கான அவர்களின் பணிக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம் என்றார்.

*3 பேரில் யாருக்கு அதிகாரம்?

முகேஷ் அம்பானி-  நீடா அம்பானி தம்பதியருக்கு இஷா, ஆகாஷ், ஆனந்த் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். மேலும், சமீப காலமாக நிர்வாகத்தில் இவர்களின் தலையீடு அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில், தலைமை மாற்றம் எப்போது, எப்படி நடத்தப்பட உள்ளது? இவர்களில் யாருக்கு தலைமை பதவியும், அதிக அதிகாரமும் கிடைக்கும்? என்பதை முகேஷ் அம்பானி கூறவில்லை.

Related Stories: