முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் மாவட்டத்தில் 33 பேருக்கு உயர்தர சிகிச்சை-ராஜேஷ்குமார் எம்பி தகவல்

நாமக்கல் : முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 33 பேருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மாரப்பநாய்க்கன்பட்டியை சேர்ந்த பழனிசாமி(45) என்பவர், நாமக்கல் அரவிந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இவரை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி, நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், ராஜேஷ்குமார் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 மணி நேரம் என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இந்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 10 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 7 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்ந்து, 2 நாட்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி சிகிச்சை பெறலாம்.

அவர்களுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்தப் பரிசோதணை, எலும்பு முறிவு சிகிச்சை போன்றவை இலவசமாக அளிக்கப்படும். 2 நாட்கள் சிகிச்சைக்கான முழு கட்டணத்தை, தமிழக அரசு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்குகிறது. தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுபவர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு  திட்டத்தின் மூலம் சிகிச்சைபெற முடியும். இத்திட்டம் தொடங்கிய 9 நாட்களில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 33 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள், உயர்தரமான சிகிச்சை பெறவேண்டும் என்ற நோக்கில், சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார்.அப்போது நகர பொறுப்பாளர்கள் பூபதி, சிவக்குமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் அண்ணாதுரை மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

Related Stories: