விழுப்புரம் மாவட்டத்தில் 6,04,031 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு

*குறித்த காலத்துக்குள் வழங்க ஏற்பாடு

*ஆய்வுக்கு பின் கலெக்டர் தகவல்

விழுப்புரம் : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகள் வரும் ஜனவரி 3ம் தேதி தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், மிளகாய், மல்லித்தூள், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, துணிபை ஒன்று அடங்கிய பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 6,04,031  குடும்ப அட்டைதாரர்களுக்கு 153 கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விழுப்புரம், செஞ்சி, வானூர், திருக்கோவிலூர் ஆகிய நுகர்பொருள் வாணிப கிடங்குகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு பொட்டலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இந்த பரிசு தொகுப்பு பொட்டலமிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மிக கவனத்துடன் சரியான அளவுடன் பொருட்களை பொட்டலமிட வேண்டும்.

பாதுகாப்பாகவும், மளிகை பொருட்கள் சேதம் ஏற்படாத வகையிலும் சிறந்த முறையில் பணியினை மேற்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலர் ராஜசேகரன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: