சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி; ஒமிக்ரானுக்கு 5 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நேற்று மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: 3 பல்நோக்கு கண் மருத்துவ வாகனங்களை துவக்கி வைத்து இருக்கிறோம். இந்தியாவில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பார்வை குறைபாடு 1.19 சதவீதம். ஆனால், தமிழகத்தில் அது 1.18 ஆக இருக்கிறது. 50 வயது மேற்பட்டவர்களுக்கான கண் புரை பாதிப்புகள், சர்க்கரை நோய், நீர் அழுத்த பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கான மருத்துவம் அளிக்கும் வகையில் இந்த மூன்று வாகனங்களும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஏராளமான நட்சத்திர விடுதிகள் இருக்கிறது. 31ம் தேதி இரவு நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாய் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நடைபெறும். இதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் எந்த நட்சத்திர விடுதியும் நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை முழுமையாக விடுதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாரோடு இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஒமிக்ரான் தொற்றை பொறுத்தவரை பாதிப்புக்குள்ளானவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 34 பேரில் ஏற்கனவே 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 12 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தார்கள். அதில் 7 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்கள். தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமிக்ரான் தொற்று இருக்கிறது என்று கண்டறியப்பட்டவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

* மாஸ்க் அணிந்தால் சென்னையில் கொரோனா குறையும்

சென்னையை பொறுத்து வரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி 600 என்கிற எண்ணிக்கை இருக்கிறபோது, சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள்  பாதிப்புகள் அடைவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே சென்னை மக்கள்,  ‘எல்லோரும் முகக்கவசம் அணிவதை 100% உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சென்னையில் குடிசைப்பகுதியில் இருக்கும் மக்கள் 33% தான் முகக்கவசம் அணிகிறார்கள் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. அதேபோல் வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் 58% மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். எனவே வீட்டை விட்டு வெளியே வந்தால் 100% முகக்கவசத்தோடு வரவேண்டும். இது மற்ற கிராமங்கள்,  நகராட்சிகளுக்கு, பேருராட்சிகளுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டியாக இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் மக்கள் முகக்கவசம் அணிவதில் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: