நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி.யிடம் பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார். குடிநீர், கழிவறை வசதி கூட இல்லாமல் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. ரூ.19 கோடியில் தொடங்கப்பட்ட மேம்பாட்டு பணிகள் முழுமை பெறாமல் பாதியில் நிற்பதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில்கள் டவுன் ரயில் நிலையம் வழியாகவே செல்கின்றன. இதனால் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது தொடர்பாக வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் நேற்று மதியம் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு  மேற்கொண்டார்.  

அப்போது, ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பிளாட்பாரங்களில் ரயில் பெட்டிகள் நிற்கும் பகுதியை கண்டறியும் (இன்டிகேட்) வசதி ஏற்படுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  பயணிகள் முன் வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் வசந்த் எம்.பி உறுதி கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்ைல என்ற புகார்கள் வந்ததன் அடிப்படையில், இங்கு வந்து ஆய்வு செய்தேன். ரயில் நிலையத்துக்கான எந்த வித வசதிகளும் இல்லை. வருமானத்தின் அடிப்படையில் எப் பிரிவில் இருந்த இந்த ரயில் நிலையம், தற்போது டி பிரிவுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வில்லை. பயணிகள் நிற்பதற்கான மேற்கூரைகள், இருக்கைகள் கூட முழுமையாக இல்லாமல் உள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையத்தில் கழிவறை மற்றும் குடிதண்ணீர் கூட இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் ரயில்வே அலட்சியமாக உள்ளது என்பது தெரிகிறது. குமரி மாவட்ட ரயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் அல்லது நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனிக்கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக நாங்களும் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது முதற்கட்டமாக, குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் குமரி மாவட்டத்துக்கு கூடுதல் ரயில்கள் தேவை ஆகும். இதை ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசுவேன். நாடாளுமன்றத்திலும் வலியுறுத்த உள்ளேன். டவுன் ரயில் நிலையத்தில் உடனடியாக பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்றார்.

திருப்பதி, வேளாங்கண்ணிக்கு ரயில்

விஜய் வசந்த் மேலும் கூறுகையில், கன்னியாகுமரி மிகப்பெரிய ஆன்மிக ஸ்தலமாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். இதே போல் குமரி மாவட்டத்தில் இருந்து திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற ஸ்தலங்களுக்கும் ஏராளமானவர்கள் செல்கிறார்கள். எனவே நாடு முழுவதும் உள்ள பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருப்பதிக்கு நேரடி ரயில்வே சேவை வேண்டும். இது  தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றார். இந்த ஆய்வின் போது இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் செல்வகுமார், சிவபிரபு, கணியாகுளம் ஊராட்சி தலைவர் ஷரோனா, விவசாய அணி மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: