பொன்னையாற்று ரயில்வே பாலம் தற்காலிகமாக சீரமைப்பு நிறுத்தப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கின: 3 ரயில்கள் மட்டும் ரத்து

திருவலம்: திருவலம் பொன்னையாற்று ரயில்வே பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் ரயில்கள் நேற்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை வெள்ளம் காரணமாக, திருவலம் பொன்னையாற்று பழமையான ரயில்வே பாலத்தில் 38, 39வது தூணுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது கடந்த 23ம்தேதி கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ரயில்வே பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடந்தது. இப்பணிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் இரவு அந்த பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. தொடர்ந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது.

இதையடுத்து ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களையும் வழக்கம்போல் இயக்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை முதல் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் ஓடத்தொடங்கின. அதேநேரத்தில் சேதமாகி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் மட்டும் ரயில்கள் 10 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல ரயில் லோகோ பைலட்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், வேலூர் கன்டோன்மென்ட்- சென்னை பீச் மெமு, திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் மட்டும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘சீரமைக்கப்பட்ட ரயில்வே பாலத்தை 45 நாட்களுக்கு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், தெற்கு ரயில்வேயின் 2 தொழில்நுட்ப குழுக்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் செஸ் மீட்டர் என்ற நவீன கருவி மூலம் பாலத்தின் அதிர்வுகளை அவ்வப்போது கண்காணித்து அறிக்கை தயாரிப்பார்கள். ஏதாவது சிக்கல் என்றால் உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணியில் சேதமான பகுதிகளில் போடப்பட்ட கலவை பொருந்துவதற்கு 30 நாட்கள் ஆகலாம்’’ என்றனர்.

Related Stories: