புதுக்கோட்டை அருகே பரபரப்பு: தொழிலதிபர் வீட்டில் 750 பவுன் கொள்ளை மிளகாய் பொடி தூவிச்சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கோபாலபட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக். தொழிலதிபர். இவரது மனைவி ஐனுல் ஜாரியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக புருணை நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்கு அவருக்கு 7 சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் வந்துசென்ற ஜகுபர்சாதிக், அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வரவில்லை. கோபாலபட்டினத்தில் உள்ள ஜகுபர் சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்கா பீவி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி சாதிக்கா பீவி, வழக்கம்போல ஜகுபர்சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை சாதிக்கா பீவியின் மகள் உம்மல்ஹமீலா, ஜகுபர்சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் கதவோரம் மிளகாய்பொடி கிடந்துள்ளது. பின்பக்க கதவு திறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தாய் சாதிக்காபீவியை வீட்டிற்கு வரவழைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் சூட்கேசில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன.

இதையடுத்து சாதிக்காபீவி, ஜகுபர்சாதிக்கிடம் போனில் தகவல் தெரிவித்தார். உடனே ஜகுபர்சாதிக், சூட்கேசில் வைத்திருந்த 750பவுன் நகை இருக்கிறதா? எனக் கேட்டுள்ளார். அங்கு தேடி பார்த்தபோது, 750 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.3.37 கோடி எனக்கூறப்படுகிறது. மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: