ரூ.28,197 கோடியில் இமாச்சலில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்

மாண்டி: இமாச்சலப்பிரதேசத்தில் நீர்மின் திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.28,197கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த அரசு திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ரூ.28,197கோடி மதிப்பிலான 287 முதலீட்டு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.6700கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதேபோல் லுக்ரி நீர்மின் திட்டம், தவுலாசித் நீர் மின் திட்டம், சாவ்ரா- குட்டு நீர் மின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.11,281 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த 3 நீர்மின் திட்டங்களும் பிராந்தியத்தின் நீர்மின் திறனை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.

தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான மாநில அரசு விரைவான மாற்றத்தை அடைந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் மாநிலத்தின் வளர்ச்சி நிறுத்தப்படவில்லை. இமாச்சலில் தொடங்கப்பட்டுள்ள நீர்மின் திட்டங்கள் காலநிலைக்கு ஏற்ற புதிய இந்தியாவின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை கட்டியெழுப்புவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றது’ என்றார்.

*புத்தாண்டில் முதல் வெளிநாட்டு பயணம்

2022ம் ஆண்டில் முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஜனவரி 6ம் தேதி அவர் புறப்பட்டுச் செல்வார் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் இந்த தேதி இன்னும் இறுதியாகவில்லை. இந்த பயணத்தின் போது, துபாயில் நடந்து வரும் பிரமாண்டமான துபாய் எக்ஸ்போ வர்த்தக கண்காட்சியை பார்வையிட உள்ளார். இதில் இந்திய அரங்கையும் மோடி பார்க்க உள்ளார். மேலும், இந்த பயணத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: