நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திரா மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து வந்த நீராலும் மற்றும் பூண்டியை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பியதாலும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு கடந்த அக்டோபர் முதல் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நேற்று பூண்டி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 764 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியது. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு  83 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடிக்கும் தண்ணீர் நிரம்பியதால் கடல் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 265 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், தற்போது 3,213 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 34.99 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் உபரிநீர் இன்று காலை 6 மணி முதல் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்க இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 424 கன அடி நீரும், பேபி கால்வாய்  வழியாக வினாடிக்கு 14 கன அடி நீரும் என மொத்தம் 438 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Related Stories: