மாநகராட்சிக்கு ரூ12 கோடி வருவாய் இழப்பு தஞ்சை நட்சத்திர ஓட்டலுக்கு சீல் வைப்பு: கலெக்டர் அதிரடி

தஞ்சை: தஞ்சையில் 1995ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி உலக தமிழ் மாநாடு நடந்தது. இதையொட்டி 1994ம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்குவதற்காக விடுதி கட்ட தஞ்சை நீலகிரி தெற்கு தோட்டம் கிராமத்தில் 1 ஏக்கர் 6,160 சதுர அடி நிலத்தை செல்வராஜ் என்பவருக்கு 30 ஆண்டு குத்தகைக்கு மாவட்டம் நிர்வாகம் கொடுத்தது. அந்த இடத்தில் டெம்பிள் டவர் என்ற ஓட்டல் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இடத்துக்கு குத்தகை காலம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு குத்தகை பாக்கி செலுத்தாமல், மாநகராட்சிக்கு ரூ.12 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் குத்தகை உரிமத்தை குமார், வெங்கடாசலம் ஆகியோருக்கு செல்வராஜ் கொடுத்ததும் தெரியவந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எப்படி குத்தகை உரிமத்தை மற்றொருவருக்கு கொடுக்க முடியும். குத்தகை விதி மீறப்பட்டுள்ளது என்று செல்வராஜிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு வெங்கடாசலம் என்பவர் பதில் மனு அளித்தார். அதில் குத்தகை உரிமம் என்னிடம் உள்ளது, ஓட்டலை நான் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு கடந்த 23ம் தேதி பதிலளித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீசில், மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் குத்தகை உரிமத்தை எப்படி மாற்ற முடியும். எனவே ஓட்டலை உடனடியாக காலி செய்யுங்கள் என்றும், குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்று ஓட்டலில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றினர். பின்னர் ஓட்டலை பூட்டி கலெக்டர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சபா இடத்தை மதுபான கூடமாக மாற்றி தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.19.14கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய சகோதரர்கள் 4பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: