திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை வழக்கம்போல் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேலூர்; திருவலம் பொன்னையாற்று ரயில்வே பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் ரயில்கள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் 3 ரயில்கள் மட்டும் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாறு மற்றும் பொன்னையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போதும் இரண்டு ஆறுகளிலும் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதன் காரணமாக திருவலம் பொன்னையாற்றின் மீது கட்டப்பட்ட பழமையான ரயில்வே மேம்பாலத்தில் 38, 39வது தூணுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது கடந்த 23ம்தேதி கண்டறியப்பட்டது.

இதையடுத்து ரயில்வே பொறியாளர் குழுவினர் உடனடியாக அன்று இரவு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இரவு பகலாக ரயில்வே பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடந்தது. இப்பணிகள் நிறைவடைந்து நேற்று இரவு அந்த பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. தொடர்ந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது. இதில் திருப்தி ஏற்படவே இன்று காலை முதல் இந்த மார்க்கத்தில் ஏற்கனவே சென்று கொண்டிருந்து ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களையும் வழக்கம்போல் இயக்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி இன்று காலை முதல் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் ஓடத்தொடங்கின. அதேநேரத்தில் சேதமாகி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் மட்டும் ரயில்கள் 10 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல ரயில் இன்ஜின் பைலட்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் மெமு, திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் மட்டும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: