வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நடந்த முகாம்களில் 36,369 பேருக்கு தடுப்பூசி

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நேற்று சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை முற்றிலும் தடுக்கும் விதமாக, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடந்து வந்தது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்பதால் சனிக்கிழமை தோறும் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்றும், அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு முகாம் மட்டுமின்றி தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.அதேபோல், வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை முதல், 2வது தவணையாக 16 லட்சத்து 67 ஆயிரத்து 286 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 10 ஆயிரம் பேருக்கு எஸ்எம்எஸ் சுகாதார துறையின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், ரயில் நிலையங்கள் உட்பட 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் சுமார்  36,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவக் குழுவினரிடம், கிராமத்தில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கேட்டறிந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ராமன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அடுத்த நாகல், கீழ் ஆலத்தூர், பி.கே.புரம், சந்தைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது. இதனை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு  அலுவலர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நூறு சதவீத தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை  விரைந்து மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.

முகாமில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அப்போது தாசில்தார் சரண்யா, துணை தாசில்தார் பலராமன், ஆர்ஐ மணிமேகலை, விஏஓ அகிலா, ஊராட்சி செயலாளர் ராமதாஸ்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பாலா சேட்டு உட்பட ஊரக வளர்ச்சி துறையினர் உடனிருந்தனர்.

பொன்னை: காட்பாடி அடுத்த பொன்னை ஊராட்சிக்குட்பட்ட எஸ்.என்.பாளையம் பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் வேலூர் ஆர்டிஓ விஷ்ணுபிரியா மற்றும் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொன்னை, கீரைசாத்து, மேல்பாடி மற்றும் வள்ளிமலை ஊராட்சிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: