ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர் அலைக்கழிப்பு-சென்னையை சேர்ந்தவர்

திருமலை : புகழ்பெற்ற வாயு ஸ்தலமான ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய நேற்று காலை வந்தார். 80 சதவீத மாற்றுத்திறனாளியான ரமேஷ் கோயில் வளாகத்திற்கு வந்த பிறகு அங்கிருந்த தேவஸ்தான பேட்டரி வாகனத்தின் மூலம் கொடிமரம் வரை அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர், கோயிலுக்குள் சென்று மூலவரை தரிசிக்க சக்கர நாற்காலிகள் இருக்கிறதா? என கேட்டார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் சக்கர நாற்காலிகளை காண்பித்தனர். அதில், சக்கரங்கள் உடைந்தும், கால்  வைக்க உரிய முறையில் இல்லாமல் கயிறு கட்டி இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பக்தர் ரமேஷ் கூறியதாவது:

ஆந்திர மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக  சாய்வு நடைமேடை மற்றும் சக்கர நாற்காலிகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர். நான் 150 கி.மீட்டர் தூரத்தில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க செய்ய வந்தேன்.

பக்தர்கள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் பெறக்கூடிய ஸ்ரீகாளஹஸ்தி கோயில் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அது இல்லாததால் கொடிமரத்துடன் திரும்பி செல்லக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதனால், என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சக்கர நாற்காலிகள் சென்று கீழே விழுந்து இறந்தால் அவர்களுக்கு மாநில அரசு ₹10 கோடி இழப்பீடு தர வேண்டும். எனவே, இதன் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: