ஆந்திர மாநிலத்தில் ‘நாடு நேடு’ திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளை ஹைடெக் பள்ளிகளாக மாற்றியவர் முதல்வர் ஜெகன்மோகன்-சித்தூர் எம்எல்ஏ புகழாரம்

சித்தூர் : ஆந்திர மாநிலத்தில் ‘நாடு நேடு’ திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி ஹைடெக் பள்ளிகளாக முதல்வர் ஜெகன்மோகன் மாற்றியுள்ளதாக சித்தூர் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு தெரிவித்தார்.  சித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாநில ஆசிரியர் பெடரேஷன் சங்கத்தின் 75வது ஆண்டு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் பாடம் கற்று தருகின்றனர். ஏராளமான மாணவர்கள் நல்ல முறையில் படித்து கலெக்டர், காவல்துறை அதிகாரி, நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற உயர் பதவிகள் பெற்று வருகின்றனர். மாநில அரசும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.

முதல்வர் ஜெகன்மோகன் ‘நாடு  நேடு’ திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகள் தரம் உயர்த்தி ஹைடெக் பள்ளிகளாக மாற்றியமைத்துள்ளார். ஆசிரியர்களுக்கு ஓய்வு அறைகள், மினரல் வாட்டர் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு இருக்கைகள், வகுப்பறைகளில் மின்விசிறிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். மாநில ஆசிரியர் பெடரேஷன் சங்கம் தொடங்கி 75  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சங்கத்தை மதுசூதனன் என்பவர் தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து, எத்தனையோ தலைவர்கள் இச்சங்கத்தை நல்ல பாதையில் தொடர்ந்து வழி நடத்தி வருகின்றனர். மேலும், இச்சங்கம் தொடர்ந்து ஆசிரியர்களின் நலனுக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், மாநில ஆசிரியர் பெடரேஷன் சங்க மாவட்ட தலைவர் மது, துணை தலைவர் அசோக், செயலாளர் பிரபாகர், 33வது வார்டு கவுன்சிலர் இந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: