விஜய் ஹசாரே கோப்பை இமாச்சல் சாம்பியன்

ஜெய்பூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இமாச்சல பிரதேசம் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பைனலில் தமிழகம் - இமாச்சல் அணிகள் மோதின. டாஸ் வென்ற இமாச்சல் முதலில் பந்துவீச, தமிழக அணி 49.4 ஓவரில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முதல் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில் (14.3 ஓவரில் 40/4), தினேஷ் கார்த்திக் - பாபா இந்திரஜித் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 202 ரன் சேர்த்தது.

தினேஷ் 116 ரன் (103 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), இந்திரஜித் 80 ரன் (71 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். ஷாருக்கான் 42 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விஜய் சங்கர் 22 ரன் விளாசினர். சுந்தர், சிலம்பரசன் தலா 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இமாச்சல் தரப்பில் பங்கஜ் ஜஸ்வால் 4, கேப்டன் ரிஷி 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இமாச்சல் 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிரஷாந்த் 21, திக்விஜய் 0, கங்தா 18, அமித் குமார் 74 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரர் ஷுபம் அரோரா 136 ரன் (131 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), ரிஷி 42 ரன்னுடன் (23 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் இருந்தனர். தமிழக பந்துவீச்சில் வாஷிங்டன், அபராஜித், சாய்கிஷோர், முருகன் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் தொடர முடியாத நிலையில், ‘விஜேடி’ முறையில் இமாச்சல் 11 ரன் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இமாச்சல் முதல் முறையாக விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக  அரோரா தேர்வு செய்யப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட தமிழக அணி 2வது இடத்துடன் திருப்தியடைந்தது.

Related Stories: