பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் வடசேரி பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: இரட்டை ரயில் பாதை பணியால் ஏற்பட்ட சிக்கல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இரட்டை ரயில் பாதை பணிக்காக நீர்வழி பாதைகளை அடைத்து மண் ெகாட்டியதால் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் மார்க்கத்தில் தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளையொட்டி, நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி ரயில்வே தண்டவாள பகுதிகளில் மண் கொட்டப்பட்டு உள்ளது.

குறிப்பாக நீர்வழிப்பாதைகளில் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளதால் புத்தேரி தெற்குபத்து பகுதிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் தண்ணீர் இல்லை. கடந்த மாதம் பெய்த கன மழையால் நிரம்பிய குளங்களும், கால்வாய்களும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியதால், தற்போது தெற்குபத்து பகுதியில் உள்ள விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சாக்கடை நீரில் தான் பாசனம் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே உடனடியாக ரயில் நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் இணைந்து கால்வாய் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மணலை அகற்ற வேண்டும். அப்போது தான் சுமார் 30 ஏக்கருக்கு மேலான விளை நிலங்களை காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சுமார் 1 ஏக்கர் பயிர்கள் கருகி விட்டன. அதிகாரிகளின் அலட்சியம் நீடித்தால், மேலும் பல ஏக்கர் விளை நிலங்கள் கருகும் நிலை வந்து விடும் என விவசாயிகள் கூறி உள்ளனர்.

Related Stories: