வாட்ஸ் அப்பில் வந்த கோரிக்கை; புதிய பள்ளிகட்டிடம் கட்ட அமைச்சர் உடனடி நடவடிக்கை: நங்கப்பட்டி மக்கள் நன்றி

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளிகட்டிடம் சேதம் குறித்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சருக்கு வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கோரிக்கை அனுப்பினர். உடனடியாக  புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே தி.சூரக்குடிக்கு உட்பட்டது நங்கப்பட்டி. இப்பகுதியில் கடந்த 1980ல் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் நங்கப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை,ச சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலானதால் மேற்கூரை மிகவும் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் அடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்கள் விரிசலடைந்துள்ளன. தவிர மேற்கூரை மற்றும் தரைதளத்தில் தண்ணீர் ஊறி காணப்படுகிறது.

மிகவும் பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் மாற்று இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என அதிமுக ஆட்சியின் போது கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் பள்ளியில் நிலை குறித்தும், புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என கட்டிட புகைப்படத்துடன் அப்பகுதி மக்கள் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனுக்கு வாட்ஸ் அப்பில் கோரிக்கை மனு அனுப்பினர். இக்கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்,  தற்காலிகமாக பள்ளி மாற்றுகட்டிடத்தில் இயங்கவும், உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதன்படி கலெக்டர் மதுசூதன்ரெட்டி, திட்ட அலுவலர் சிவராமன் ஆகியோரின் உத்தரவின்படி சாக்கோட்டை ஒன்றிய ஆணையர் கேசவன் மற்றும் வட்டாரவளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

தற்போது தற்காலிகமாக சமுதாயக்கூடத்தில் பள்ளி செயல்பட வசதியாக கழிப்பறை மற்றும் சமையல் கூடம் அமைக்கும் பணி நடக்கிறது. தவிர புதிய பள்ளி கட்டிடம் கட்ட இடம்தேர்வு செய்யப்பட்டு, பழுதடைந்த கட்டிடத்தை இடிக்கவும், புதிய கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் கோரிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சருக்கு திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர்கேஎஸ்.ரவி, ஒன்றியசெயலாளர் ஆனந்த், ஊராட்சி தலைவர் பொறியாளர்முருகப்பன், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் பழனியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: