விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி முடிந்தது பொன்னை ரயில்வே பாலத்தில் மேலும் 2 தூண்களுக்கு இடையில் அரிப்பு

திருவலம்: பொன்னை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், மேலும் 2 தூண்களுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் திருவலம் பொன்னையாற்றில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் 38, 39வது தூண்களுக்கு இடையே விரிசல்கள் ஏற்பட்டது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. இதற்காக சென்னை- காட்பாடி மார்க்கமாக செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி அந்த இடத்தில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைத்தனர். பின்னர், விரிசல் ஏற்பட்ட பகுதியில் பாலத்துக்கு அடியில் இரும்பு கர்டுகள் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் மேம்பாலத்தின் மற்ற தூண்களை ஆய்வு செய்தனர். அப்போது, 21, 22வது தூண்களுக்கு இடையிலும், 27, 28வது தூண்களுக்கு இடையிலும் பாலங்களின் அடிப்பகுதியில் அதிகளவிலான வெள்ள நீரால் மணல் அரிக்கப்பட்டு தூண்களுக்கு பக்கவாட்டில் 10 அடிக்கும் மேலாக பள்ளங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, அப்பகுதிகளில் அடுத்த கட்ட சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.

Related Stories: