நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்! தேர்தல் ஆணையம், பிரதமருக்கு அலகாபாத் ஐகோர்ட் வலியுறுத்தல்

அலகாபாத்: நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையமும், பிரதமரும் ஆலோசிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. ெகாரோனா தடுப்பு நெறிமுறைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களில் பின்பற்றவில்லை. மாறிவரும் சூழ்நிலைக்கு  ஏற்ப உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்காததால், தேர்தல் கமிஷன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்  என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் (ஜனவரி) பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட தயாராக உள்ளது.

சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர்  சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை கோவா சென்றிருந்தனர். அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர்   சுஷில் சந்திரா கூறுகையில், ‘கோவாவில்  தேர்தலை  நடத்தத் தயாராக உள்ளோம். ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட மற்ற மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கும் தயாராகி வருகிறோம். தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா  நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வது தொடர்பாக தேர்தல்  அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சமூக விரோதச் செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்குதல் தொடர்பான விசாரணையின் போது,  கொரோனா நெறிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள்  குவிந்திருந்தனர்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ‘ஒமிக்ரான் பாதிப்புகள்  அதிகரித்து வருகின்றன. மூன்றாவது அலைக்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே,  இந்த சவாலை எதிர்கொள்ள உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் வழிகாட்டுதல்களை  உருவாக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து நீதிபதி சேகர் குமார் கூறுகையில், ‘நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்குத் தடை செய்ய வேண்டும். முடிந்தால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தலை (உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்) ஒத்திவைப்பதை தேர்தல் ஆணையமும், பிரதமர் மோடியும் பரிசீலிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பேரணிகளில் கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை. தேர்தல் நடைபெறுவதை தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அதன் முடிவுகள் இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும். மாறாக அரசு தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய உத்தரவிடலாம். மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்தலை ஓரிரு மாதங்கள் தள்ளிப்போடலாம். இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. இலவச தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளின் பேரணிகள் மற்றும் கூட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காக வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அவர், பேரவை தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். காரணம், கடந்த காலங்களில் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மேற்குவங்க பேரவை தேர்தல் மற்றும் உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்களும் காரணமாக இருந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்றார். உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அறிவுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, 5 மாநில தேர்தல்கள் அதன் காலாவதி காலகட்டத்திற்குள் நடத்தப்படுமா? என்பது கேள்வியாக உள்ளது.

Related Stories: