சி.வி.சண்முகம் சொன்னபடி ரூ.50 கோடி செலவு செய்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது என்பதில் என்ன சந்தேகம்? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் கட்சியினர் அதிர்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் நிருபர்கள் அவரிடம்,  ‘‘அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி என்பது கிடையாது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. ரூ.50 கோடி செலவு செய்தாலும் அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருக்கிறாரே’’ என்று கேட்டனர்.

அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘அதில் என்ன சந்தேகம் இருக்கிறது?’’ என்றார். இதை கேட்ட கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நிருபர்கள், ‘‘அவர் அதிமுக பற்றி விமர்சித்துள்ளார்’’ என்று தெளிவுபடுத்தினர். இதை கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், ‘‘அப்படியா....பேசியிருக்கிறாரா? எங்களுக்குத் தெரியாதே’’ என்று நழுவினார். இதையடுத்து, ‘‘தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளனர். அவர் கிரிப்டோ கரன்சி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறதே’’ என்று கேட்டது அவரது காதில் சரியாக விழவில்லை. உடனடியாக ‘‘என்ன பிச்சைக்காரன்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதனால் சிரிப்பலை எழுந்தது. பின்னர் கேள்வியை புரிந்து கொண்டு, ‘‘கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று தங்கமணிக்கு தெரியாது என சொல்கிறார். புதிதாக இருக்கிறது. இதெல்லாம் வெளியே வந்தால்தான் தெரியும்’’ என பதிலளித்தார்.

Related Stories: