அரிமளம் அருகே கண்மாயில் நட்டு வைத்த தைல மரக்கன்றுகளை அகற்ற வேண்டும்-வனத்துறைக்கு பொதுப்பணித்துறை கடிதம்

திருமயம் : அரிமளம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் வனத்துறையினர் நடவு செய்துள்ள தைல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் அதிகளவில் நடவு செய்யப்பட்டு உள்ளதால் இதனை அகற்ற வேண்டும் என ஒவ்வொரு பகுதி விவசாயிகளும் பல வருடங்களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் வனத்துறையினர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து தைல மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வருவது அப்பகுதி விவசாயிகள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அரிமளம் அருகே உள்ள ஏணங்கம், இச்சிக்கோட்டை கண்மாய்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வனத்துறையினர் தைல மரம் நடவு செய்து உள்ளதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் செய்தனர். பொதுமக்களின் புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கண்மாயில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் வனத்துறையினர் தைல மரம் நடவு செய்து இருப்பதை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஏரிகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007ன் படி பொதுப்பணி துறை சொந்தமான இடத்தில் உள்ள தைல மரங்களை வனத்துறையினர் அகற்ற வேண்டுமென வனத் துறையினருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியினர் பொதுப்பணி துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: