ஆற்காடு நகராட்சியில் அதிகாரிகள் அதிரடி 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-₹50 ஆயிரம் அபராதம் விதிப்பு

ஆற்காடு :  ஆற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ₹50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசுகின்ற பிளாஸ்டிக் கைப்பைகள், டீ கப்புகள், கிளாஸ்கள்,  தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக்  பொருட்களை பயன்படுத்த  கடந்த  1.1.2019ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. எனவே, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆற்காடு நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக நகராட்சி  ஆணையாளர் சதீஷ்குமாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சத்தியமூர்த்தி, மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், கேசவன், பிரேம்நாத், அனிமேட்டர் ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர், பஜார் வீதி உட்பட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பதையும், பயன்படுத்துவதையும் கண்டறிந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த  3 கடைகளுக்கு மொத்தமாக ₹50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: