வத்திராயிருப்பு பகுதியில் புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்து ஓடைகள்-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்து ஓடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், நீர்வரத்து ஓடைகள் மூலமாக வந்து தாணிப்பாறை வழுக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த தண்ணீர் லிங்கம் கோயில் ஓடை மந்தித்தோப்பில் உள்ள தடுப்பணை வழியாக செல்கிறது.

பின்னர் லிங்கம் கோயில் ஓடையிலிருந்து செல்லும் தண்ணீர் மாத்துார் குளத்தில் கலக்கிறது. இதிலிருந்து மதகுகள் வழியாக சென்று கல்லணை ஆற்றுப்பாலம் வழியாக ஆலங்குளம் கண்மாய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில், மந்தித்தோப்பு பகுதியிலிருந்து ஆயகுளம் கண்மாய்க்குச் செல்லக்கூடிய ஓடைகளில் நீர்வரத்து அதிகமாகும்போது ஓடைகளில் உடைப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் புதர்மண்டிக் கிடப்பதால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியிலிருந்து வரக்கூடிய ஓடைகள், மந்தித்தோப்பு பகுதியிலிருந்து வரக்கூடிய ஓடைகளை வருவாய்த்துறை அளவீடு செய்ய வேண்டும்.

நீர்வரத்து ஓடைகளின் நீளம், அகலம் ஆகியவற்றை கணக்கிட்டு, அதில் ஆக்கிரமிப்பு இருந்தால், அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும். நீர்வரத்து ஓடைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால், நிலத்தடி நீர் உயர வாய்ப்பு ஏற்படும். பாப்பனத்தான் கோயில் பகுதியிலிருந்து செல்லக்கூடிய ஓடை தண்ணீர் வன்னான்குளம் மற்றும் மாத்துார் குளத்திற்கும் செல்கிறது. இந்த நீர்வரத்து ஓடைகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: