புறம்போக்கு இடத்தில் கட்டியதாகக் கூறி கிறிஸ்துவ தேவாலயம் அகற்றம்: பொதுப்பணி துறையினர் அதிரடி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே கிருஸ்துவ தேவாலயம் கட்டியிருந்த இடத்தை ஆற்றுக்கால் புறம்போக்கு இடம் என கூறி பொதுப்பணி துறையினர் இடித்து தள்ளினர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் காரைத்திட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. வாயலூர் தண்டுக்கரையில் ஒதுக்குப்புறமான பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ‘மெய் சமாதான ஜெபவீடு’ என்ற பெயரில் தேவாலயத்தை ஓலை குடிசையில் கட்டினார். அங்கு, அப்பகுதியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பிரார்த்தனை செய்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு, குடிசை தேவாலயத்தை, மர்மநபர்கள் தீயிட்டு எரித்தனர். அதன்பிறகு அதே இடத்தில் மீண்டும் தகரம் மூலம் தேவாலயம் கட்டி வழிபட்டு வந்தனர்.

மேற்கண்ட பகுதியில் உள்ள தேவாலயம், ஆற்றுக்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுப்பணி துறை சார்பில் ரமேஷுக்கு தெரிவித்தனர். இதை தொடர்ந்து ரமேஷ், பொதுப்பணி துறை மற்றும், வருவாய்த்துறை, சென்னையில் உள்ள சிறுபான்மை நல ஆணையத்திடம் கால அவகாசம் கேட்டு மனு அளித்தார். இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள், நேற்று மதியம் மேற்கண்ட பகுதிக்கு சென்று, தேவாலயத்தை இடித்து தள்ளினர். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அதிகாரிகள், தேவாலய கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், ‘இந்த கிருஸ்துவ ஆலயம் அமைக்கப்பட்ட நாள் முதல் சிலர், தேவாலயத்துக்கு எதிரான செயல்களை செய்கின்றனர். பாஜவை சேர்ந்தவர்கள் மற்றும் சிலரின்  பேச்சை கேட்டு, பொதுப்பணி துறை அதிகாரிகள் எவ்வித அவகாசமும் கொடுக்காமல் தேவாலயத்தை இடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நேரத்தில் அவசர, அவசரமாக தேவாலயத்தை இடித்தது வேதனையளிக்கிறது என்றார். இதுபற்றி பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த கட்டிடம் ஆற்றுக்கால் புறம்போக்கில் கட்டப்பட்டு இருந்தது. இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது’ என்றனர்.

Related Stories: