கொல்கத்தா மாநகராட்சியில் திரிணாமுல் ஹாட்ரிக் வெற்றி: ஒரு இடத்தை பிடித்து பாஜ படுதோல்வி

கொல்கத்தா: கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளது. இங்கு பாஜ ஒரே ஒரு வார்டில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா மாநகராட்சிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 144 வார்டுகளில் பெரும்பான்மையினவற்றில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மாலை நிலவரப்படி 101 வார்டுகளில் அவர்கள் வெற்றி பெற்றனர். 33 வார்டுகளில் முன்னிலையில் இருந்தனர்.

இந்தாண்டு ஏப்ரலில் நடந்த சட்டமன்ற தேர்தலை போலவே, கொல்கத்தா மாநகராட்சி தேர்தலிலும் பாஜ படுதோல்வி அடைந்தது. இதன் வேட்பாளர் ஒரே ஒரு வார்டில் மட்டுமே வெற்றி பெற்றார். மேலும், 3 வார்டுகளில் முன்னிலை பெற்றனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலா ஒருவரும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றி குறித்து இம்மாநில முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில்,”இந்த வெற்றியை மாநில மக்களுக்கு சமர்பிக்கிறேன். பாஜ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் எங்களுக்கு எதிராக போட்டியிட்டன. ஆனால், அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன. இந்த வெற்றியானது வரும் நாட்களில் தேசிய அரசியலில் வழிகாட்டும்,” என்றார். கடந்த 2010ம் ஆண்டு முதல் கொல்கத்தா மாநகராட்சியை திரிணாமுல் தன்வசம் வைத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 124 வார்டுகளில் வெற்றி  பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: