மார்த்தாண்டம் நகரில் பீக் அவர்சில் சரக்கு வாகனங்களுக்கு தடை: பொதுமக்கள் கோரிக்கை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் செல்லும் இணை சாலை மிகவும் குறுகலான சாலை. இந்த சாலையில் ஏராமான வர்த்தக நிறவனங்கள் செயல்படுகின்றன. இதனால் ஏராளமான பொதுமக்கள் இந்த சாலைக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படும். இதற்கிடையே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலை பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. விபத்தில் வாகனங்கள் சிக்கும்போது பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறும். இவ்வாறு இந்த சாலை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், அவஸ்தையாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்கள் கொண்டு வரும் சரக்கு வாகனங்களை பீக் அவர்ஸ் என அழைக்கப்படும் காலை மற்றும் மாலை வேளையில் சாலையோரம் நிறுத்தி பொருட்களை இறக்குகின்றனர். இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. அதோடு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது, சாலை பள்ளங்களில் பைக்கில் செல்வோர், நடந்து செல்வோர் விழுந்து காயமடைவது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் பொருட்கள் இறக்கிகொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது. இரு வாகனங்கள் உரசியபடி நீண்ட நேரம் நின்றதால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவ்வாறு இந்த சாலையில் தினமும் பதற்றமும், பரபரப்புமாக காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை பீக்அவர்சில் சாலையோரம் நிறுத்துவதை தடுத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பள்ளங்களை நிரப்பி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: